மன அழுத்தம்.. வொர்க் பிரஷர்.. விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜீவி

Gv Prakash and Saindhavi
குழந்தை பாடகராக திரையுலகில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், இசையமைப்பாளராக தனது பயணத்தை வெயில் படத்தின் மூலம் தொடங்கினார். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அவர், தனது தனித்துவமான இசையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார். பின்னாளில், நடிப்பிலும் தன்னை நிரூபித்து, பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு இசை கச்சேரியில், அவர் தனது முன்னாள் மனைவியும் பிரபல பாடகியுமான சைந்தவியுடன் இணைந்து பாடியதன் மூலம் ரசிகர்களிடம் மேலும் கவனம் பெற்றார்.

அவரது பிஸியான வாழ்க்கையினூடே சமீபத்தில் ஒரு பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்வை பற்றிய சில உண்மைகளை வெளிப்படுத்தினார். அதில் அவர், “தனிப்பட்ட வாழ்கையும் நாம் செய்யும் வேலையும் இரண்டு வேறு விஷயங்கள். இதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு நடப்பது மிக முக்கியம். இதை உணர்ந்தால்தான் நமது தொழிலை சிறப்பாக முடிக்க முடியும். இப்போதே நான் அந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளதால் தொடர்ந்து செயல்பட முடிகிறது.” என கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் குறித்து கேட்டபோது, அவர், “நாம் செய்யும் தொழிலில் 100% உழைப்பையும் நேர்மையையும் செலுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த வேலைக்கு நாம் தகுதி இல்லாதவர்களாக கருதப்படுகிறோம். எனக்கும் தனிப்பட்ட ரீதியில் மன அழுத்தம் இருக்கிறது, ஆனால் அதை வேலையிலிருந்து வேறு என பிரித்துக்கொள்வதன் மூலம் என்னால் அதை சமாளிக்க முடிகிறது.” என்று பகிர்ந்து கொண்டார்.
அவரது இந்த உரையாடல், இன்று பலருக்குமான முக்கியமான வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையின் இடையே சமநிலையை நோக்கி செல்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது திறமை, உற்சாகம், மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் இந்த மனோபாவம், அவரை இன்னும் உயர்த்தும் முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.